3210
Visitor

4-ஆம் ஆண்டு நிறைவு விழா மாநாடு

திருவள்ளுவர் ஆண்டு 2037


2006 ஆகஸ்டு 12, 13 சனி, ஞாயிறு

சேலம்

தீர்மானங்கள்

1. உலகத் தமிழ்க் குழந்தைகளின் கல்வி

உலகில் பல நாடுகளில் வாழும் தமிழர்களின் குழந்தைகள் தமிழ் மொழி, இசை, கலை, பண்பாடு ஆகியவற்றைக் கற்க, போதுமான வாய்ப்பு இன்மையால் தாய் மொழியான தமிழையும், நமது கலை, இசை போன்றவற்றையும், நமக்கே உரிய தனித்த பண்பாட்டினையும் அறிந்து கொள்ள முடியாமல் பிற மொழி, பிற பண்பாட்டுடன் வளர வேண்டிய, வேண்டாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த அவல நிலையைப் போக்குவதற்கான திட்டங்களை வகுக்கவும், அதனைச் செயற்படுத்துவதற்குமான பொறுப்பினைத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு அளிப்பதோடு அதற்குத் தேவையான நிதி ஆதாரங்களைத் தமிழக அரசும், இந்திய அரசும் அளிக்க முன்வரவேண்டுமென இம்மாநாடு வேண்டிக்கொள்கிறது.

2. பிறநாட்டுத் தமிழர் நிலை ஆராயக்குழு

மலேசியா, சிங்கப்பூர், அரபு நாடுகள் முதலிய பல நாடுகளுக்குப் பிழைப்புத் தேடிச் சென்ற தமிழர்கள் பல வகையான ஒடுக்குமுறைகளுக்கும், சுரண்டல்களுக்கும் ஆளாகி நலிகிறார்கள். இந்நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் அவர்களுக்கு உதவ முன்வருவதில்லை. இவர்களின் இன்னல்களைப் போக்கும் பிரச்னைகளில் போதுமான அக்கறை காட்டுவதில்லை.
மேற்கண்ட நாடுகளில் நிலவும் உண்மை விவரங்களை அறியாத நிலையில் ஏராளமான தமிழர்கள் பிழைப்புத் தேடி இந்நாடுகளுக்கு மேலும் மேலும் சென்று பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள். வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் நிலை குறித்து முழுமையாக ஆராய்ந்து இந்திய அரசுக்கு ஆலோசனை கூறத் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றை அனுப்ப வேண்டும் என இம்மாநாடு வற்புறுத்துகின்றது.

3. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தை மேம்படுத்துக

சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் உலக அளவிலும், இந்திய அளவிலும் நடக்க வேண்டிய உயர்நிலைத் தமிழ் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. ஆனால் அந்தப் பணி முழுமையாக நிறைவேறவில்லை. எனவே இந்நிறுவனத்தை உலகளவில் சிறந்த தமிழாராய்ச்சி நிறுவனமாக உயர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை இம்மாநாடு வேண்டிக் கொள்கிறது.

4. செம்மொழித் தமிழ் உயராய்வு மையம்

செம்மொழிப் பட்டியலில் தமிழ் மொழியையும் சேர்க்க வேண்டும் என்று நூறாண்டு காலத்திற்கும் மேலாக வற்புறுத்தி வந்த தமிழ் மக்களின் கோரிக்கையை ஏற்ற இந்திய அரசுக்கும் அதற்குக் காரணமான தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழறிஞர்கள் ஆகியோருக்கும் இம்மாநாடு பாராட்டினையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது. அதே வேளையில் செம்மொழியின் கால அளவினை 1500 ஆண்டுகளாகக் குறைத்திருப்பதை மாற்றி 2000 ஆண்டுகளாக ஆக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. மேலும் பண்பாட்டுத் துறையில் இருந்து, கல்வித் துறைக்கு முழுமையாக மாற்றியமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
தமிழ்ச் செம்மொழி தொடர்பான பணிகளை, எந்த நிறுவனத்திடமும் ஒப்படைக்காமல், அதற்கென்று தனியாகச் செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் (Centre for Excellence of Classical Tamil) என்று தனியான நிறுவனத்தை நிறுவி அதற்குத் தேவையான நிதியுதவியை அளிக்க முன்வருமாறு இந்திய அரசை இம்மாநாடு வேண்டிக் கொள்கிறது. செம்மொழித் திட்டம் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

5. தமிழீழ விடுதலைப் போரை அங்கீகரிக்க வேண்டுதல்

இலங்கை இனப்பிரச்னையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவோ, போர் நிறுத்த உடன்பாட்டினைத் தொடர்ந்து கடைப்பிடிக்கவோ சிங்களப் பேரினவாத அரசு சிறிதளவு கூட விரும்பவில்லை என்பது வெளிப்படையாக தெரிந்துவிட்ட நிலையில் இந்திய அரசும், உலக நாடுகளும் தங்கள் நிலையினை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியமும், அவசரமும் ஏற்பட்டுள்ளன.
தமிழ்நாட்டு மக்களோடு தொப்புள் கொடி உறவு பூண்டு மொழி, இனம், பண்பாடு, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றால் மிக நெருக்கமாக இருக்கக்கூடிய தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரித்து அவர்களுக்குச் சகல உதவிகளைப் புரிய முன்வருமாறும், அவ்வாறே செய்யுமாறு உலக நாடுகளை வற்புறுத்துமாறும் இந்திய அரசை இம்மாநாடு வேண்டிக் கொள்கிறது.

6. ஈழத் தமிழ் ஏதிலியருக்கு உதவி

சிங்கள இனவெறியர்களின் திட்டமிட்ட இனப் படுகொலைத் தாக்குதல்களிலிருந்து உயிர் தப்பிப் பிழைக்கத் தமிழ்நாட்டை நோக்கி ஈழத்தமிழர்கள் ஏதிலிகளாக ஓடிவருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நிலைமை தொடர்ந்து நீடித்து வருகிறது. தமிழ்நாட்டில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட ஈழத்தமிழர்கள் ஏதிலிகளாக முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். போதுமான உணவு, சுகாதார வசதிகள், உறைவிட வசதிகள் இல்லாமல் பெரும் துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
ஐ.நா. பேரவையில் துணை அமைப்பான UNHCR என்னும் அமைப்பு உலகின் பல்வேறு நாட்டு அகதிகளுக்கு எல்லா வகையிலும் உதவி புரிந்து சிறப்பாகத் தொண்டாற்றி வருகிறது. எனவே ஈழத் தமிழ் ஏதிலிகளை பராமரிக்கும் முழுப் பொறுப்பினையும் UNHCR வசம் ஒப்படைக்க வேண்டும் என இந்திய அரசை இம்மாநாடு வற்புறுத்துகிறது.

7. தாய்த்தமிழ் வழிப் பள்ளிகள்

தமிழ்நாட்டில் தமிழ் உணர்வாளர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்ட தாய்த் தமிழ் வழிப் பள்ளிகள் தமிழக அரசின் உதவியோ அங்கீகாரமோ இல்லாமல் தத்தளிக்கின்றன. இந்தப் பள்ளிகள் சிறப்பாகச் செயல்படவும் நவீன தொழில் நுட்ப ஆலோசனைகள் வழங்கவும் உலகத் தமிழர்கள் முன் வர வேண்டும் என இம்மாநாடு வேண்டிக் கொள்கிறது. வெளிநாடுகளில் உள்ள தமிழரமைப்புகள் தமிழ்நாட்டில் உள்ள தாய்த் தமிழ்ப் பள்ளிகளைத் தத்தெடுத்துக் கொண்டு உதவ முன்வருவதன் மூலம் தமிழ்வழிக் கல்வி வளர்ச்சிக்குத் துணை புரிய வேண்டுமென இம்மாநாடு வேண்டிக் கொள்கிறது.

8. ஈழத்தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்துப் பேசுக

இலங்கைக் குடியரசுத் தலைவர், அமைச்சர்கள் அடிக்கடி தில்லி வந்து இந்தியப் பிரதமரையும் மற்ற அமைச்சர்களையும் சந்தித்துத் தங்கள் நிலைப்பாட்டினைத் தெரிவித்து ஆதரவு திரட்ட அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதைப் போல இலங்கை நாடாளுமன்ற தமிழ் உறுப்பினர்கள் தில்லி வந்து இந்தியப் பிரதமரைச் சந்தித்து தங்கள் நிலைப்பாட்டினை எடுத்துக் கூற வாய்ப்பு அளிக்க வேண்டும் என இந்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

9. கடலடி ஆய்வை மேற்கொள்ளுக

பூம்புகாரில் கடலடி ஆய்வை மேற்கொண்ட கிரகாம் ஆன்காக் உலகின் தலை சிறந்த தாய் நாகரிகம் எனக் கருதத்தக்க ஒரு நகர நாகரிகம் கடலடியில் மூழ்கிக் கிடப்பதாகவும் அது 11,000 ஆண்டுகள் பழைமை கொண்டதாகவும் அறுதியிட்டுக் கூறினார். பல்வேறு காரணங்களால் அவரின் ஆய்வு தடைப்பட்டுள்ளது. இச்சூழலில் கிரகாம் ஆன்காக் அவர்களைக் கொண்டு பூம்புகாரிலும் மற்றுமுள்ள தமிழகக் கடற்கரை நகரங்களிலும் கடலடி ஆய்வை மேற்கொள்ள தமிழக அரசை இம்மாநாடு வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

10. பழந்தமிழ் எழுத்துக்கள்

தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டு வரும் சங்க காலத்திற்குரிய தமிழ் எழுத்துக்கள் யாவும் அசோகனின் காலமான கி. மு. 258-க்கும் அஃதாவது கி. மு. 3-ஆம் நூற்றாண்டிற்குப் பிந்தியவை என்றும், அசோகனின் பிராமி எழுத்தைப் பின்பற்றி அமைக்கப்பட்டவை என்றும் ஒரு சில ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் அண்மைக்காலத்தில் தமிழகத்தில் கிடைக்கும் கல்வெட்டுகள் காலத்தால் முந்தையனவாக உள்ளதால் தமிழ் எழுத்துக்களைத் தமிழ் பிராமி எழுத்துக்கள் என அழைக்காமல் அவற்றைப் பழந்தமிழ் எழுத்துக்கள் என்று அழைக்க வேண்டும் என இம்மாநாடு தமிழ் ஆய்வாளர்களைக் கேட்டுக் கொள்கிறது.

Optimized to view in 800x600 with 16 bit color or higher mode.
Best viewed with Internet Explorer
3.x or later &
Netscape Communicator 4.x or later

Download Tamil Font to view our pages.
Copyright THENSEIDE 2002.